புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பல பகுதிகளிலும் வெள்ளநீர் படிப்படியாக வடிந்து வருகிறது. வரும் நாள்களில் கனமழை பெய்யாவிட்டால், தற்போது நிரம்பி வழிந்தோடும் யமுனா நதியில் நீர்மட்டம் விரைவில் வழக்கநிலைக்குத் திரும்பக்கூடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
வடக்கு புதுடெல்லியில் இரு தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகளில் ஞாயிற்றுக்கிழமை செயல்பாடுகளை அனேகமாக தொடரலாம் என்று திரு கெஜ்ரிவால் டுவிட்டரில் சனிக்கிழமை பதிவிட்டார்.
புதுடெல்லியின் மூன்று தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டதன் காரணமாக அந்நகரில் சுமார் 25 விழுக்காட்டு தண்ணீர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது.
வடஇந்தியவில் கடந்த வாரம் பெய்த கனமழையால், டசன் கணக்கானோர் உயிரிழந்தனர்.
மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் புதுடெல்லியும் ஒன்று.
டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையை சுற்றியுள்ள சாலைகளிலும் யமுனா நதியிலிருந்து நீர் வழிந்தோடியது.
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டுள்ளன. சில கடைகளும் வர்த்தகங்களும் இயங்கவில்லை.
நகரில் மேலும் பல பகுதிகளில் வெள்ளநீர் புகுவதைத் தடுக்க ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கனரக வாகனங்கள் டெல்லிக்கு வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பழ, காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
தாழ்வான பகுதிகளிலிருந்து பள்ளிகளிலும் இதர கட்டடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண நிலையங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் மாற்றப்பட்டுள்ளனர்.
கூடாரங்களிலும் மேம்பாலச்சாலைகளுக்கு அடியிலும் மேலும் பலர் தஞ்சம் புகுந்துள்ளனர்.