தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’

சேர்ந்து போராடுவோம்: எதிர்க்கட்சிகள் முழக்கம்

2 mins read
8243f0c2-d7cf-4260-99bc-14f6a0ca4065
பெங்களூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள். - படம்: இந்திய ஊடகம்

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான 26 எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமையன்று பெங்களூரில் ஆலோசனை மேற்கொண்டன.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிக்க வியூகங்கள் வகுப்பது குறித்து அவை ஆலோசித்தன.

காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ‘இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (INDIA)’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இரண்டாவது நாள் கூட்டம் நிறைவுபெற்றபின் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு விரைவில் அமைக்கப்படும். மும்பையில் நடைபெறும் அடுத்த கூட்டத்தில் குழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். கூட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்,” என்றார்.

அத்துடன், ஜனநாயகத்தை அழிக்க பாஜக முயற்சி செய்து வருவதாகச் சாடிய அவர், அதனை எதிர்க்க ஒன்றுசேர்ந்து போராடுவோம் என்றும் சொன்னார்.

தங்களுக்கு இடையே சில வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றைப் பின்னுக்குத் தள்ளி நாட்டு நலனுக்காக ஒன்றுசேர்ந்து இருப்பதாக திரு கார்கே குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் பரப்புரையை நிர்வகிப்பதற்காக டெல்லியில் ஒரு செயலகம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கும்போதெல்லாம் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

“பாட்னாவில் முதல் கூட்டம் நடைபெற்றபோது திமுகவைக் குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடந்தது. பெங்களூருவில் இரண்டாவது கூட்டம் நடைபெற்றபோதும் சோதனை நடத்தப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

இதனிடையே, எதிர்க்கட்சிகளுக்குத் தனது வலிமையை எடுத்துக்காட்டும் வகையில் பாஜக 36 கட்சிகளை ஒன்றுதிரட்டி டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை கூட்டம் நடத்தியது.

அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்