வெள்ளத்தில் மிதக்கும் குஜராத்;விமான நிலையத்தில் தண்ணீர்

1 mins read
5a519a52-a152-40a6-afd7-516bf38a5725
குஜராத்தின் அகமதாபாத் நகரில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அகமதாபாத் விமான நிலையத்தில் தண்ணீர் புகுந்தது. - படம்: இந்திய ஊடகம்

அகமதாபாத்: இந்தியா முழுவதிலும் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வட மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், அரியானா, பஞ்சாப், அசாம், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் மகாராஷ்டிராவிலும் பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஜூனாகத் மாவட்டத்தில் பலத்த மழையால் கால்நடைகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

அகமதாபாத்தில் பல இடங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் அதிக நீர் சூழ்ந்துள்ளது. அகமதாபாத் விமான நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்து முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விமானப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விமானங்கள் புறப்படுவதிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இதர பல மாவட்டங்களில் பெய்த மிக கனமழையால் குஜராத் வெள்ளத்தில் மிதக்கிறது.

குஜராத்தில் மொத்தம் உள்ள 206 நீர் தேக்கங்களில் 43 நீர் தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. 37 நீர் தேக்கங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்