சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இந்தியா விண்ணில் பாய்ச்சியது

சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இந்தியா விண்ணில் பாய்ச்சியது

2 mins read
2271ee2a-91e3-4b6b-9067-9f0b19ea6b57
சிங்கப்பூரின் ஏழு செயற்கைக் கேள்களைச் சுமந்தபடி இந்தியாவின் ‘பிஎஸ்எல்வி-சி56’ என்ற உந்துகணை உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6.31 மணிக்கு வெற்றிகரமான முறையில் விண்ணுக்குச் சென்றது. - படம்: இஸ்ரோ/ஃபேஸ்புக் 

புதுடெல்லி: சிங்கப்பூரின் ஏழு செயற்கைக்கோள்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமான முறையில் விண்ணில் செலுத்தியது.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான விண்வெளி ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கிறது.

ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டா உந்துகணைத் தளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6.31 மணிக்கு அந்தச் செயற்கைக்கோள்களைச் சுமந்துகொண்டு ‘பிஎஸ்எல்வி-சி56’ என்ற உந்துகணை மேலே கிளம்பியது.

‘பிஎஸ்எல்வி-சி56’ உந்துகணையில் பொருத்தப்பட்டுள்ள சிங்கப்பூரின் ‘டிஎஸ்-எஸ்ஏஆர்’ எனும் செயற்கைக்கோளே ஆகப் பெரியது. அது 360 கிலோ எடைகொண்டது.

மேலே சுற்றுப்பாதையில் செயல்படத் தொடங்கியதும் இந்தச் செயற்கைக்கோள் சிங்கப்பூரின் பல்வேறு அரசாங்க அமைப்புகளுக்கும் ரேடார் படங்களை அனுப்பி உதவும்.

டிஎஸ்-எஸ்ஏஆர் செயற்கைக்கோளில் இருக்கும் ரேடார் சாதனத்தை ‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரிஸ்’ என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. அது இரவு, பகல் என்று பாராமல் எல்லா பருவ நிலைகளிலும் திறம்பட செயலாற்றும் வல்லமையைக் கொண்டது.

‘நியூஸ்பேஸ்’ என்ற சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த ‘நியூலயன்’ என்ற மற்றொரு செயற்கைக்கோள் தென்கிழக்கு ஆசிய வட்டாரம் முழுவதற்கும் இணைப்புகளை வழங்கி உதவும்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வெலாக்ஸ்-ஏஎம், ஆர்கேட், ஸ்கூப்-2, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கேலஸியா-2, ஏலியனா எனும் தனியார் நிறுவனத்தின் ஆர்ப்-12 ஸ்ட்ரைடர் ஆகியவை விண்வெளி சென்றிருக்கும் இதர செயற்கைக்கோள்கள்.

இவ்வாண்டில் வணிக ரீதியில் இந்தியாவின் விண்வெளி அமைப்பான இஸ்ரோ ஏவும் மூன்றாவது உந்துகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முயற்சியும் வெற்றியடைந்தால், கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து இந்தியா விண்வெளிக்கு அனுப்பிய வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 431ஆக உயரும். அவை 36 நாடுகளுக்குச் சொந்தமானவை.

‘பிஎஸ்எல்வி-சி56’ உந்துகணை கடந்த இரு வாரங்களுக்குள் இஸ்ரோ செலுத்தவிருக்கும் இரண்டாவது உந்துகணை.

‘எல்விஎம்-3’ உந்துகணை, சந்திரயான்-3 விண்கலத்தை இம்மாதம் 14ஆம் தேதி அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

சந்திரனை ஆய்வுசெய்யும் நோக்கில் அந்தச் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோ அடுத்ததாக சூரியனையும் குறிவைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்