அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள 10 மாடி மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏறக்குறைய 125 நோயாளிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றதன் காரணமாக மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு பொருள்கள் தீப்பிடித்துக்கொண்டதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.
அந்த மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் அதிகாலை 4.30 மணியளவில் தீ மூண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

