புதுடெல்லி: இந்தியா, இம்மாதம் 15ஆம் தேதி தன்னுடைய 77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி ஒன்பதாவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். பிறகு முப்படை அணிவகுப்பை அவர் பார்வையிடுவார்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு, கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
மூவர்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்படுகின்றன. சுதந்திர தின விழாவில் நாடு முழுவதும் இருந்து 1,800க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இதன் காரணமாக செங்கோட்டையைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. 300 மீட்டருக்குள் துணை ராணுவம் நிறுத்தப்பட்டு உள்ளது.
தேசியப் பாதுகாப்புப் படையினர், சிறப்புப் பாதுகாப்புக் குழுவினர், மத்திய ஆயுதக் காவல்படையினர், டெல்லி காவல்துறையினர் உள்ளிட்ட 10,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
சுதந்திர தினத்தன்று டெல்லி விமான நிலையத்தில் திட்டமிடப்படாத விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை டெல்லியில் ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது.
செங்கோட்டை, ராஜ்காட் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
செங்கோட்டைப் பகுதியைச் சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட கட்டடங்களில் காவல்துறையினர் தொலைநோக்கிச் சாதனத்துடன் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

