வீட்டுக்குள் புகுந்து தாக்கிய திருடனை திருப்பித் தாக்கி விரட்டியடித்துள்ளார் தெலுங்கானாவைச் சேர்ந்த மாது. கண்காணிப்பு கேமராவில் பதிவான இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது.
தெலுங்கானா, ராஜண்ணா சிர்சில்லா மாவட்டம், வேமுலவாடா நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அந்த பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த திருடன் முகமூடி அணிந்தபடி கையில் இரும்புக் கம்பியுடன் அந்த வீட்டு சுற்றுச்சுவர் ஏறி உள்ளே குதித்துள்ளான்.
மாது வெளியே வரும் வரை வாசலுக்கு அருகே சுவர் ஓரமாக பதுங்கி இருந்துள்ளான். அவனைக் கண்டதும் வீட்டில் கட்டி போட்டிருந்த நாய் குரைத்துள்ளது. சத்தம் கேட்டு மாது வெளியே வந்தார்.
அப்போது இரும்புக் கம்பியுடன் காத்திருந்த திருடன் அவரைத் தாக்க முயல்வதும், மாது திருடனை எதிர்த்து தாக்குவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
மாது திரைச்சீலையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கீழே விழுகிறார். அக்கம்பக்கத்தினரின் கவனத்தை ஈர்க்க அவர் கத்துகிறார். திருடன் மாதின் வாயை மூட முயற்சிக்கிறான். ஆனால் அவனது முயற்சிகள் வெற்றியடையவில்லை. சிறிது நேரப் போராட்டத்துக்குப் பிறகு, அவன் ஓடிவிடுகிறான்.
எனினும், திருடன் தன்னிடம் இருந்து 7 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக அந்த மாது பின்னர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
40 வயதுடைய அந்த மாது வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும் மளிகைக் கடை வைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.