பெங்களூரு: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திரயான்-3 அறிவியல் அறிஞர்களை பெங்களூருவில் சனிக்கிழமை சந்தித்து, அவர்களைப் பெரிதும் பாராட்டினார்.
அந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தின் தலைவர் எஸ் சோம்நாத், பிரதமர் மோடியை வரவேற்று உபசரித்தார்.
சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பிரதமரிடம் சந்திரயான்-3 மாதிரி உருவத்தை நினைவுப் பரிசாக வழங்கினார்.
சந்திரயான்-3 நிலவில் காலடி பதித்தது பற்றி பிரதமருக்கு அறிவியல் அறிஞர்கள் விளக்கம் அளித்தனர்.
அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மோடி, சந்திரயான்-3 வெற்றியை நினைத்து உடல், மனம் என அனைத்தும் மகிழ்ச்சியால் நிறைகிறது என்று குறிப்பிட்டார்.
சந்திரயான்-3 நிலவில் கால்பதித்தபோது தாம் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதிலும் தம்முடைய மனம் எல்லாம் அந்த நிகழ்வின் மீதே மையம் கொண்டிருந்ததாக திரு மோடி தெரிவித்தார்.
‘‘இந்த வெற்றி ஒரு சாதாரண வெற்றி அல்ல. இது இந்திய அறிவியல் அறிஞர்கள் விண்வெளியில் முழங்கிய சங்கநாதமாகும்.
‘‘இதுவரை யாரும் செய்யாத சாதனையை இந்தியா படைத்து இருக்கிறது. இதுதான் இன்றைய இந்தியா.
தொடர்புடைய செய்திகள்
‘‘உணர்ச்சி மிகுந்த பாரதம், விழிப்புமிகுந்த பாரதம், புதிய வழியில் சிந்திக்கும் பாரதம் இப்போது பரிணமித்திருக்கிறது,’’ என்று திரு மோடி தெரிவித்தார்.
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் இறங்குகலம் (லேண்டர்) நிலவில் கால்பதித்த இடம் ‘சிவசக்தி’ என்று அழைக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
நிலவில் கால்பதித்து இருக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று இருப்பதாகக் குறிப்பிட்ட திரு மோடி, சந்திரயான்-3 நிலவில் இறங்கியதைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி நாளாகக் கொண்டாடப்படும் என்றும் திரு மோடி அறிவித்தார்.
விக்ரம் இறங்குகலம் நிலவின் தென் துருவத்தில் இறங்கி இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று என்று வர்ணிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து விண்வெளியில் இந்தியாவின் செல்வாக்கும் ஆதிக்கமும் வலுவடைந்து வரும் நிலையில், இஸ்ரோ அடுத்த அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்தது.
சூரியன் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலம் பிஎஸ்எல்வி-சி57 என்ற ஏவுகணை மூலம் செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் பாய்ச்சப்படும் என்று இஸ்ரோ அறிவித்து இருக்கிறது.