ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் புதிய தலைமைச் செயலக கட்டடத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு முதல்வர் கே. சந்திரசேகர ராவ் அழைப்பு விடுக்கவில்லை என்பது பெரும் விவாதமானது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, புதிய தலைமைச் செயலகத்தில் கோயில், தேவாலயம், பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு அரசு சார்பில் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது.
இதற்கு அவரும் சம்மதித்தார் என்பதால், முதலில் புதிய தலைமைச் செயலகத்திற்கு முதல்வர் சந்திரசேகர ராவ் வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் வந்தார். அவரை முதல்வர் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார்.
அதன் பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட நல்ல போச்சம்மாள் கோயிலில் நடந்த மகா குடமுழுக்கு நிகழ்ச்சியில் ஆளுநரும், முதல்வரும் மற்றும் எம்பிக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர், ரிப்பன் வெட்டி தேவாலயத்தைத் திறந்து வைத்தனர். பின்னர், பள்ளிவாசலில் பிரார்த்தனை நடந்தது.

