பெங்களூரு: தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நதி நீர் பங்கீட்டில் பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. இதனை சரி செய்ய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஜனவரி மாதம் வரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீரின் அளவை வாரியம் வரையறுத்தது. ஆனால், கர்நாடகாவுக்கே நீர் போதவில்லை என்று கூறி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடுவதில் கர்நாடக மாநில அரசு பாரபட்சம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக்கூட்டம் கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வினை அமைத்து உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, ஒழுங்காற்றுக்குழு கூட்டம் காணொளி வாயிலாக திங்கட்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கர்நாடக அணைகளில் இருந்து, அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி வரை, காவிரி நீரை தமிழகத்துக்குத் திறந்து விடும்படி பரிந்துரை செய்யப்பட்டது.
இதற்கு கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி ஆற்று நீரில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா மைசூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “காவிரி ஒழுங்காற்று ஆணையம் தமிழகத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்து விடும்படி கூறியுள்ளது.
கர்நாடக அணைகளில் நீர் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிட முடியும். ஏற்கெனவே தமிழகத்திற்கு 26 டி.எம்.சி. முதல் 30 டி.எம்.சி. வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
“தென்மேற்கு பருவ மழை குறைவால், கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது. தற்போது குடிநீர் மற்றும் விவசாய சாகுபடிக்கு மட்டும் நீர் இருப்பு உள்ளது. தமிழகத்திற்குத் தண்ணீர் கொடுத்தால், கர்நாடக மக்கள் குடிநீருக்கு அவதிப்படும் நிலை ஏற்படலாம்.
“எனவே, இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். அதுவரை கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பே இல்லை,” என்று கூறியுள்ளார்.

