கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. அதனால் கிட்டத்தட்ட 45,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அந்த மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே நாளில் 1.9 லட்சமாக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ 130,000 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரம்மபுத்ரா மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதன் காரணமாக மஜுலி, மோரிகாவ்ன், நாகாவ்ன், நல்பாரி, சிவசாகர், சோனித்பூர் உள்ளிட்ட 17 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்றூர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இவற்றில் லக்கிம்பூர் மாவட்டத்தில்தான் ஆக அதிகமானோர் அதாவது கிட்டத்தட்ட 47,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கடுத்தபடியாக தெமாஜி மாவட்டத்தில் 41,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச்சென்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட அப் பகுதிகளில் சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தண்ணீர் விநியோகம் ஆகியவை துண்டிக்கப்பட்டதால் அப்பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புப்பணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 8,000 ஹெக்டேர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன.
விஷ்வநாத், தரங்கா, உதல்குரி ஆகிய இடங்களில் சாலைகள், பாலங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவை பெருத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. அதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

