புதுடெல்லி: டெல்லியில் திங்கட்கிழமை நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த தமிழக அரசு, நிலுவையில் உள்ள 54 டிஎம்சி நீரைத் திறந்துவிட உத்தரவிடுமாறு வலியுறுத்தியது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க கர்நாடகா வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்துவிட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் டெல்லியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, ‘‘காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்பின்படி ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டியதில் 54 டிஎம்சிதண்ணீர் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
“கர்நாடக அணைகளில் தற்போது உள்ள நீரை உரிய முறையில் பங்கீடு செய்ய வேண்டும். அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் 24,000 கன அடி நீர்திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்,’‘ என வலியுறுத்தினார்.
அதற்கு கர்நாடக மாநிலத்தின் அதிகாரிகள் கூறுகையில், ‘‘கர்நாடகாவில் போதிய மழை பொழியவில்லை. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட நான்கு அணைகளும் நிரம்பவில்லை. அணைகளில் குறைவான அளவில் நீர்இருப்பதால் கர்நாடக விவசாயிகளின் பாசனத்துக்கே நீர் திறந்துவிடப்படவில்லை.
“எனவே, தமிழகத்துக்கு தற்போதைய நிலையில் 24 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை. தினசரி 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுகிறோம்,’‘ என தெரிவித்தனர்.
“காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர், ‘‘கர்நாடக அணைகளின் நீர் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் குறைந்த அளவில் பதிவான மழை ஆகியவற்றைக் கருத்தில் கொள்கிறோம்.
“அதேவேளையில் தமிழகத்தில் குறுவை;சு சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினமும் விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்க வேண்டும்,’’ என உத்தரவிட்டார்.
அந்த உத்தரவுக்கு இணங்க, கர்நாடக மாநில அரசு காவிரியில் வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் 2,292 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர் அது படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. இதேபோல், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. செப்டம்பர் 12ஆம் தேதி வரை கர்நாடகா வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

