சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.112 கோடி மதிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடம் விரைவில் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் அது அமையும் என்று மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அம்மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ வசதிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “இந்த மருத்துவமனையில், ரூ.30 லட்சம் செலவில் உணர்திறன், செயல்திறன் மேம்பாட்டுப் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிந்தனையை ஒருமுகப்படுத்துதல், ஐம்புலன் உணர்வுகளை மேம்படுத்துதல், அறிவாற்றலைத் தூண்டுதல், மூளையின் செயல்பாட்டை அதிகரித்தல், விழிப்புணர்வை அதிகரித்தல், தசை வளர்ச்சி இயக்கத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பயன்களை அடைய முடியும்,” என்றார் அவர்.
“இந்தப் பூங்காவில் ஊஞ்சல், ரங்கராட்டினம், தொடுபுலன் உணர்ச்சி மேம்படுவதற்கான பயிற்சிப் பாதை, நீர் சால் புலன் பயிற்சி, கூழாங்கற்கள், மணற்பரப்புப் பயிற்சி, வண்ண நீரூற்றுகள், இன்னிசைக் குழாய்கள் உட்படப் பல்வேறு வசதிகள் உள்ளன. ‘ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்’ குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இது மிகவும் பயன் அளிக்கும்.
“மேலும், ரூ.112 கோடி மதிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டடமும் ரூ.7 கோடியில் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளுக்கான விடுதியும் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். இன்னும் சில மாதங்களில் 3,000க்கு மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களுக்குப் பணிஆணைகளை முதல்வர் வழங்குவார் என்றும் அவர் தெரிவித்தார்.

