காவிரிப் பிரச்சினை குறித்த தமிழக அரசின் மனு செப்.21ல் விசாரணை

காவிரிப் பிரச்சினை குறித்த தமிழக அரசின் மனு செப்.21ல் விசாரணை

2 mins read
36468135-3f3c-4593-a158-5741fa3386d9
காவிரி தண்ணீருக்காக தமிழ் நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: இணையம்

புதுடெல்லி: தமிழகத்திற்குச் சேரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனு வரும் செப்டம்பர் 21ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடக் கூடிய நீரைத் திறந்துவிடவில்லை. அதையடுத்து தமிழ் நாடு அரசு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

அந்த மனுவில், ‘‘ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். செப்டம்பர் மாதத்தில் திறந்துவிட வேண்டிய 37.76 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன், தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவது குறித்த உத்தரவுகளை உரிய காலத்தில் அமல்படுத்த கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த வழக்கை கடந்த ஆக.25ஆம் தேதி விசாரித்த நீதிமன்ற அமர்வு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு, அணைகளின் நீர்மட்டம் உள்ளிட்ட விவரங்களை பிரமாணப் பத்திரமாக ஆணையம் தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

செப்டம்பர் 1ஆம் தேதி விசாரணையின்போது, தமிழக அரசு தரப்பில் தண்ணீர் திறந்துவிடக் கோரி முறையீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கை செப்.6ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடுவதாக தெரிவித்திருந்தது. அதன்படி வழக்கு நேற்று அந்த வழக்கு விசாரிக்கப்படவிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பி.எஸ்.நரசிம்மா விடுமுறையில் செல்வதால், காவிரி வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழக அரசுத் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி உள்ளிட்டோர் முன்னிலையாகி, காவிரி வழக்கை அடுத்தவாரம் விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையீடு செய்தனர். அப்போது கர்நாடக அரசுத் தரப்பில், தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்கத் தேவையில்லை என்று வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை வரும் செப்டம்பர் 21ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்