குடிசைகளைத் திரையிட்டு மறைக்க வேண்டியதில்லை: ராகுல்

குடிசைகளைத் திரையிட்டு மறைக்க வேண்டியதில்லை: ராகுல்

2 mins read
d7c02dd2-6793-4f19-a38c-0c61cc2bf427
பெரிய திரை போடப்பட்டதால் உள்ளே காற்றில்லாமல் மூச்சு முட்டுவதாக அங்கு வசிப்போர் குறைப்பட்டுள்ளனர். - படம்: சமூக ஊடகம்
Google News Preferred Icon

புதுடில்லி: ஜி20 உச்சநிலை மாநாட்டையொட்டி டெல்லிப் பகுதியில் வழி தோறும் உள்ள குடிசைப் பகுதிகளை பச்சை நிற துணிகளால் மூடியுள்ளனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி.

“இந்தியாவின் உண்மை நிலையினை மத்திய அரசு விருந்தாளிகளிடம் இருந்து மறைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை” என்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், ஏழை மக்களையும், விலங்குகளையும் மத்திய அரசு மறைக்க முயற்சி செய்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகத் தலைவர்களின் கண்களில் படாமல் இருக்க டெல்லியில் உள்ள குடிசை பகுதிகளை சுற்றி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திரைக்கட்டி இருப்பதாகவும், இதனால் மக்கள் கொதித்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி காணொளி வெளியிட்டுள்ளது.

பச்சைத் திரையால் மறைக்கப்பட்டுள்ள குடிசைப் பகுதி.
பச்சைத் திரையால் மறைக்கப்பட்டுள்ள குடிசைப் பகுதி. - படம்: சமூக ஊடகம்

காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛ஜி 20 மாநாட்டுக்கு முன்பு மோடி அரசாங்கம் தனது தோல்வியை மறைக்க ஏழைகளின் வீடுகளை திரைச்சீலைகளால் மூடியுள்ளது. ஏனென்றால் இந்த அரசன் ஏழைகளை வெறுக்கிறார்,” எனக் குற்றம்சாட்டி உள்ளது. அந்த 2.44 நிமிடக் காணொளி டெல்லியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான கூலித் தொழிலாளர்கள் தகர வீடுகளில் வசிக்கின்றனர்.

காணொளியில் பேசும் அஜர் பால் என்பவர், ‛‛நம் நாட்டுக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் வருகின்றனர். அவர்களின் கண்களில் படாமல் இருக்க குடிசைப் பகுதிகளைச் சுற்றி திரைச்சீலைகளைக் கட்டி உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தலைநகரின் நிலை இப்படி இருக்கிறது என்பதை பார்க்கவிடாமல் தடுப்பதுதான். நான் வேலை பார்த்தேன். இப்போது எனக்கு வேலை எதுவும் இல்லை. நாங்கள் தற்போது தற்காலிகமாக இங்கு வீடு கட்டி இருக்கிறோம். இது நிரந்தர வீடாக மாற்றித்தந்திருக்க வேண்டும். இதனை செய்திருந்தால் திரைபோட்டு மூட வேண்டிய அவசியம் வந்திருக்காது. வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

‛‛நாங்கள் விலங்குகள் அல்ல. நாங்களும் மனிதர்கள் தான். நாங்கள் குடிசையில்தான் வசிக்கிறோம். எங்களுக்கு என்று எதுவும் கிடைக்காத நிலை உள்ளது. நாங்கள் வெளியே சென்றாலும் அவர்கள் தவறாக பேசுகின்றனர். நாங்கள் ரோட்டில் வசிக்கிறோம். எங்களின் வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறையினர் அடாவடியாக நடக்கின்றனர். நாங்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா?. அரசு எங்களை பூச்சி போல் நினைக்கிறது,” என்று கோபமாகப் பேசியுள்ளார் ராணி என்பவர்.

அந்தக் காணொளியில் பலரும் தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020ல் டிரம்ப் இந்தியா வந்தபோது அவர் கண்களிலிருந்து குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் எழுப்பப்பட்டது பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது.

அகமதாபாத்தில் கட்டப்பட்ட மறைப்புச் சுவர்.
அகமதாபாத்தில் கட்டப்பட்ட மறைப்புச் சுவர். - படம்: சமூக ஊடகம்.

மூடிமறைப்பதால் உண்மைநிலை மறைந்துவிடாது. நாட்டின் முன்னேற்றத்தைக் காட்ட நிலைமையை மாற்ற வேண்டும் என்று பலரும் கருத்துரைத்துள்ளனர்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்