ஆந்திரா, தெலுங்கானாவில் 600 மின்னிலக்க தேநீர் கடைகள்

1 mins read
564f5923-9c91-4e4e-9594-ddbe3d1aee32
ஆந்திரா, தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் 600 மின்னிலக்கத் தேநீர்க் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. - படம்: தமிழக ஊடகம்

திருப்பதி: தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் தனியார் நிறுவனம் ஒன்று நவீன தொழில்நுட்பத்தில் புதிய தேநீர்க்கடை ஒன்றைத் திறந்து உள்ளது. இந்த கடையில் டீ போடுபவர் உள்ளிட்ட ஊழியர்கள் கிடையாது.

கியூஆர் குறியீட்டை வருடி தங்களுக்கு விருப்பமான தேநீரைப் பெற்று வாங்கிக் குடிக்கலாம். மேலும் தண்ணீர் போத்தல், பிஸ்கட் உள்ளிட்டவையும் பெற்றுக் கொள்ளலாம்.

நவீன தொழில்நுட்பத்திலான அந்தக் கடையை ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கமலாகர், மேயர் சுனில் ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அந்தக் கடையைத் தனியார் நிறுவனம் ஒன்று நடத்துகிறது. அதன் தலைமை நிர்வாக அதிகாரி வினோத்குமார் இதன் தொடர்பில் பல விவரங்களைத் தெரிவித்தார்.

இப்போது தேநீர் போடும் ஊழியர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் அவர்கள் அதிக அளவு சம்பளம் கேட்கிறார்கள். தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் எளிதாக வேண்டியதை விரும்பி சாப்பிடலாம்.

ஆந்திரா, தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் 600 மின்னிலக்கத் தேநீர்க் கடைகளைத் திறந்து இருக்கிறோம். விரைவில் நாடு முழுவதும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு செல்வோம் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்