இட்லி விற்று பிழைக்கும் சந்திரயான்-3 பணியாளர்: பொதுத்துறை ஊழியர்

2 mins read
127e24e9-0d37-4f1e-8d79-d3396497a601
ராஞ்சியில் உள்ள ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் எனும் பொதுத்துறை நிறுவனத்தின் ஊழியரான தீபக் குமார் உப்ரரியா என்ற இவர், சம்பளம் கிடைக்காததால் இட்லி விற்று கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்துகிறார். -  படம்: இந்திய ஊடகம் 

ராஞ்சி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் முயற்சியால் நிலவில் வெற்றிகரமான முறையில் தரை இறங்கிய சந்திரயான்-3 திட்ட உருவாக்கத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார், பொதுத்துறை நிறுவனங்களும் பங்குகொண்டன.

ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி பகுதியில் உள்ள ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் (HEC) எனும் பொதுத்துறை நிறுவனம் அவற்றில் ஒன்று.

பல ஆண்டுகளாகவே இந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

சந்திரயான்-3 திட்டத்தில் பங்கெடுத்த இந்நிறுவன ஊழியர்கள் உட்பட தனது 2,800 ஊழியர்களுக்குச் சுமார் 18 மாத காலமாக நிறுவனம் சம்பளம் தர இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேசத்தின் ஹர்டா மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா என்பவர் இந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு தொழில்நுட்ப ஊழியர்.

மனைவி, பள்ளிக்குச் செல்லும் இரண்டு மகள்களுடன் கூடிய குடும்பத் தலைவரான இவர், ஏவுதளக் கட்டுமான வேலைகளில் இஸ்ரோவிற்காக, தன் நிறுவனம் சார்பில் சந்திரயான்-3 விண்கலனுக்கு மடங்கும் நடைமேடையையும் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

ஆனால், ஊதியம் கிடைக்கவில்லை. பள்ளியில் மகள்களுக்கு மாதாந்திர கட்டணம் கூட செலுத்த முடியாததால் பள்ளி நிர்வாகம் கெடுபிடி செய்தது.

நெருக்கடி தாங்க முடியாமல் போகவே, ராஞ்சியில் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்டமன்ற கட்டித்திற்கு எதிரே ஒரு சாலையோர உணவகத்தைத் திறந்து இவர் இட்லி விற்பனை செய்கிறார்.

இதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்துகிறார்.

காலையில் தன் நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்லும் இவர், மாலையில் சாலையோரம் இட்லி விற்று அதில் வரும் வருமானத்தை வீட்டிற்கு கொண்டு செல்கிறார்.

இந்த ஊழியருக்கு ஆதரவாகவும் இவரின் பரிதாப நிலையை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள், கண்டனங்கள் குவிகின்றன.

குறிப்புச் சொற்கள்