மாண்டியா: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாள்களாக கர்நாடக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ண ராஜசாகர் அணை, கபினி அணைப் பகுதிகளில் முகாமிட்ட அவர்கள், காவிரி ஆற்றில் இறங்கியும் சாலைகளில் வாகன டயரைத் தீயிட்டு எரித்தும் போராட்டம் நடத்தினர்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று முடிவு செய்யப்பட்டதும் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அண்மையில் உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டதை அடுத்து கர்நாடக விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
பெங்களூரு காந்திநகர், மைசூரு, மாண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
மைசூரிலும் மாண்டியாவின் பல பகுதிகளிலும் சாலைகளை மறித்து அமர்ந்தபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாண்டியா மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காலை 6 மணி முதல் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பேருந்துகளோ ஆட்டோக்கள் உள்ளிட்ட வாடகை வாகனங்களோ ஓடவில்லை.
மக்கள் நடமாட்டம் இன்றி நகரமே வெறிச்சோடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநில எல்லையிலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

