பெங்களூரு: தமிழ் நாட்டுக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை எதிர்த்து பெங்களூரில் வரும் 26ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்குக் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்குக் கர்நாடக தனியார் வாகன உரிமையாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கர்நாடகாவில் தமிழகத்திற்குக் காவிரி நீரைத் திறந்துவிடக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து பாரதிய ஜன கட்சியினர், கன்னட அமைப்பினர், விவசாய சங்கத்தினர் ஆகியோர் சனிக்கிழமை பெங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாண்டியா பகுதியில் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் காவிரி நீரைத் திறப்பதற்கு எதிராக கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது. பெங்களூரில் தமிழர்கள் மீதும்,தமிழக வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. மாண்டியாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கும் காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்திற்குக் காவிரி நீர் திறக்கப்பட்டது.
இதைக் கண்டித்து, பாஜக, மஜக ஆகிய எதிர்க்கட்சிகள் சனிக்கிழமை போராட்டத்தில் குதித்தன.
விவசாய சங்கத்தினர், கரும்பு விவசாயிகள் சங்கத்தினர், மாண்டியா விவசாயிகள் பாதுகாப்புக் கூட்டமைப்பு, கன்னட சலுவளி வாட்டாள் கட்சி, கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் பெங்களூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், ராம்நகர் ஆகிய இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
காவல் துறை உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்திய கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா, சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் நடந்துகொள்வோர் மீது சட்டம் பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு ஆணையிட்டுள்ளார்.