பெங்களூரு: தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்டித்து பெங்களூருவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
முழு அடைப்பு போராட்டத்துக்கு பெங்களூரு உணவக உரிமையாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் உள்ளிட்ட 150 அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக, மஜத, ஆம் ஆத்மி கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால் தமிழகத்தில் இருந்து சென்ற பேருந்துகள், வாகனங்கள் பல ஜூஜூவாடியில் நிறுத்திவைக்கப்பட்டன. இரு மாநிலங்களுக்கும் இடையேயான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் உத்தரவின்பேரில் கர்நாடக அரசு, தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.
இதைக் கண்டித்து கர்நாடக நீர்பாதுகாப்புக் குழு சார்பில் நடத்தப்படும் கடையடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கியது.
முழு அடைப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் தனியார் கல்வி நிலையங்கள் செவ்வாய்க்கிழமையன்று மூடப்பட்டன. அரசுப் பள்ளி, கல்லூரி, வங்கிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கியதாகக் கூறப்பட்டது.
பெங்களூரில் பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. காலை 11 மணிக்கு டவுன் ஹாலில் இருந்து மைசூரு வங்கி சதுக்கம் வரை கண்டன ஊர்வலம் நடக்கிறது.
பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவாஜி நகர், அல்சூர், டேனரி சாலை, ஆஸ்டின் டவுன், விவேக் நகர், ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டியாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

