வீட்டுக்கடன் வாங்குவோருக்கு ரூ.60,000 கோடி மானியம்: தயாரானது புதிய திட்டம்

2 mins read
60239c4a-af43-45cf-b1bf-32d0aba9ab2c
தேர்தல்கள் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து சலுகைத் திட்டங்கள் அறிமுகம் காண்கின்றன. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வீட்டுக்கடன் வாங்குவோருக்கு ரூ.60 ஆயிரம் கோடி வட்டி மானியம் வழங்கும் திட்டம் தயாராகிவிட்டது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஓரிரு மாதங்களிலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு கடந்த மாதம் 18% குறைத்தது. அதனைத் தொடர்ந்து, வீட்டுக் கடன் வட்டி மானிய திட்டமும் அறிமுகமாக உள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான வீட்டுக்கடன் வட்டியில் மானியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இந்தத் திட்டம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வந்த நிலையில், தற்போது திட்டம் தயாராகிவிட்டதாகவும் மத்திய அமைச்சரவை இதற்கு விரைவில் ஒப்புதல் வழங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளுக்குச் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் திட்டத்தால், நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏறக்குறைய 25 லட்சம் குடும்பத்தினர் பயனடைவார்கள் எனத் தெரிகிறது.

ரூ.50 லட்சத்துக்கும் குறைவாக 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தக்கூடிய வீட்டுக்கடன் பெறுவோர் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதி உடையவர்களாக இருப்பார்கள்.

அதேநேரம், மொத்தக் கடனில் ரூ.9 லட்சத்துக்கு மட்டும் 3 முதல் 6.5 விழுக்காட்டுக்கு உட்பட்ட வட்டி மானியம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. எஞ்சியுள்ள கடனுக்கு, வங்கி விதிக்கும் வட்டியை வாடிக்கையாளரே செலுத்த வேண்டியிருக்கும்.

இது குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், நகரங்களில் சொந்த வீடு வாங்கும் கனவில் இருக்கும் எளிய மக்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டியில் நிவாரணம் அளிக்கும் திட்டம் தயார் நிலையில் உள்ளது என்றார்.

குறிப்புச் சொற்கள்