காவிரி விவகாரம்: கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம்

காவிரி விவகாரம்: கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம்

2 mins read
57ee6862-1b00-41c0-bfb0-d1bf7d1f82fb
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அப்போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். வெள்ளிக்கிழமை முழு அடைப்பின் போதும் பலர் கைதாகினர். - படம்: ராய்ட்டர்ஸ்.

பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தை அடுத்து, அம்மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இரு மாநில எல்லைகளில் பதற்றம் நிலவுவதை அடுத்து, காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இரு மாநிலங்களுக்கும் சொந்தமான அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றின் உத்தரவின் அடிப்படையில், காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

ஆனால், தங்கள் மாநிலத்தின் தேவைகளை எதிர்கொள்வதற்கே போதுமான தண்ணீர் கையிருப்பில் இல்லை என்று கூறி, கர்நாடகா தண்ணீர் வர மறுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

அங்குள்ள விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கன்னடத் திரையுலகத்தினரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். கன்னடத் திரையுலகம் சார்பில் பெங்களூரில் அமைதிப் போராட்டம் நடைபெற்றது.

கர்நாடகா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன.

பெங்களூரில் சனிக்கிழமை (இன்று) நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் தமிழர்கள் அதிகமாக வாழும் சிவாஜிநகர், அல்சூர், டேனரி சாலை, ஆஸ்டின் டவுன், ராமபுரம் உள்ளிட்ட இடங்களில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே, பெங்களூரில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் அங்குள்ள விமான நிலையத்திற்குள் திடீரெனப் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் காவலர்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

போராட்டம் காரணமாக 44 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

முழு அடைப்பு காரணமாக கர்நாடகா முழுவதும் வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் பெங்களூரு உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதற்கிடையே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்