சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் பலி, 100 பேர் மாயம்

1 mins read
ccf2a79f-a392-486a-9e46-22759d48ee37
சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை களத்தில் இறங்கியது. மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் மழை, வெள்ளத்தில் சிக்கிய 100 பேரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. - படம்: இபிஏ

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துவிட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்று தெரியவில்லை. காணாமல் போனவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் வடக்குப் பகுதியில் உள்ள லாச்சென் பள்ளத்தாக்கில் புதன்கிழமை அதிகாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அங்குள்ள லோனக் ஏரி அருகே பல மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.

விடாது பெய்த கனமழையால் முக்கிய ஆறுகள் நிரம்பி வழிந்ததை அடுத்து, மங்கன், பேக்யாங், கேங்டாக், நம்சி ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கனமழையாலும் வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தலைநகர் கேங்டாக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது.

வெள்ளத்தில் சிக்கிய 102 பேரை காணவில்லை. இவர்களில் இதில் 22 ராணுவ வீரர்களும் அடங்குவர். மேலும் 26 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதால் அவர்களில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சிக்கிம் திடீர் வெள்ளம் மற்றும் இமாச்சலப் பிரதேச வெள்ளத்தை தேசிய பேரிடர்களாக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்