பெங்களூரு: தமிழகத்துக்கு நொடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செயல்படுத்த முடியாத ஒன்று என கர்நாடகத் துணை முதல்வர் டி கே சிவகுமார் கூறியுள்ளார்.
இதன் தொடர்பில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கர்நாடக அரசின் நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவகுமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், மேகதாது அணை இருந்திருந்தால் தற்போது தண்ணீர் பிரச்சினை இவ்வளவு தீவிரமடைந்திருக்காது என்று தெரிவித்தார். மேகதாது அணை மூலம் வறட்சி காலங்களில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
அத்துடன், மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக வரைவுத் திட்டம் தயாரித்துள்ளதாகவும் அதனைச் செயல்படுத்த தமது அரசு உறுதிபூண்டுள்ளதாவும் இதில் தேவையான அனைத்துச் சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் விளக்கினார்.
கர்நாடகத்தில் கடுமையான வறட்சி நிலவுவதாகத் தெரிவித்த திரு சிவகுமார், நீராதாரம் பெருகும் வரை புதிய பயிரை விதைக்க வேண்டாம் என்று விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் சிறிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதை மனத்தில் கொண்டு அடுத்த கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்று திரு சிவகுமார் தெளிவுபடுத்தினார்.
காவிரி ஆற்றின் நடுவே மேகதாது அணை கட்டுவதில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் இதில் வெற்றி நிச்சயம் என்றும் துணை முதல்வர் சிவகுமார் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
கர்நாடகாவின் ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் நடுவே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு 2017 ஆம் ஆண்டு அறிவித்தது.
இதன் மூலம் 4.75 டிஎம்சி தண்ணீர் சேமித்து பெங்களூரின் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறியது

