தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவில் மாண்டுகிடந்த இந்திய வம்சாவளிக் குடும்பம்

1 mins read
cea87bfe-9681-4b37-bdf3-bbe8f674b382
தேஜ் பிரதாப் சிங், 43, சோனல் பரிக்கர், 42, தம்பதியரும் இவர்களின் 10 வயது மகனும் ஆறு வயது மகளும் வீட்டில் இறந்து கிடந்தனர். - படம்: தேஜ் பிரதாப் சிங்/ஃபேஸ்புக்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் இந்திய வம்சாவளித் தம்பதியரும் அவர்களுடைய இரு பிள்ளைகளும் வீட்டில் மாண்டுகிடக்கக் கண்டெடுக்கப்பட்டனர்.

பிளேன்ஸ்புரோ எனும் பகுதியில் உள்ள வீட்டில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் தேஜ் பிரதாப் சிங், 43, சோனல் பரிக்கர், 42, தம்பதியரும் இவர்களின் 10 வயது மகனும் ஆறு வயது மகளும் இறந்து கிடந்ததாக பிளேன்ஸ்புரோ காவல்துறை தெரிவித்தது.

படுகொலை நடந்ததன் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிளேன்ஸ்புரோ காவல்துறையினர் தற்போது சட்ட அமலாக்கப் பிரிவுடன் சேர்ந்து விசாரணையை நிறைவுசெய்ய பணியாற்றுகின்றனர்.

“இது ஒரு தனிப்பட்ட சம்பவம். இதன் தொடர்பில் சமூகத்தின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் பங்கம் ஏற்படும் சாத்தியம் இல்லை என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்,” என்று பிளேன்ஸ்புரோ காவல்துறையின் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் ஈமன் பிளன்சார்ட் கூறினார்.

குடும்பத்தாரின் மரணம் தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக சிபிஎஸ் நியூஸ் செய்தித் தளத்திடம் அவர்களின் உறவினர்கள் கூறினர். சிங்கும் பரிக்கரும் மகிழ்ச்சியான தம்பதியராகத் தெரிந்ததை சுட்டிய அவர்கள், குறிப்பாக சமூகத்தில் சிங் துடிப்புடன் செயல்பட்டதை நினைவுகூர்ந்தனர்.

‘நெஸ் டிஜிட்டல் எஞ்சினியரிங்’ நிறுவனத்தில் முதன்மை பொறியாளராக சிங் பணியாற்றியது அவரது ‘லிங்ட்இன்’ பக்கத்தில் தெரியவந்தது.

சிங்-பரிக்கர் தம்பதியருக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்த அனுபவம் இருந்ததாக அவர்களின் உறவினர்கள் கூறினர்.

2018 ஆகஸ்ட்டில் அத்தம்பதியர் US$635,000க்கு வீடு வாங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்