1,000 குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கும் ஊபர் நிறுவனம்

1,000 குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கும் ஊபர் நிறுவனம்

1 mins read
4a24b14e-7a5a-47c1-b265-2ae08679d73f
ஊபர் நிறுவனம் இந்தியாவில் வாடகை கார்ச் சேவையைத் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை முன்னிட்டு ஓட்டுநர்களின் பிள்ளைகள் 1,000 பேருக்குக் கல்விச் செலவை ஏற்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஊபர் இந்தியா நிறுவனத் தலைவர் பிரப்ஜீத் சிங் (உள்படம்). - படங்கள்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ஊபர் நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளில் வாடகை கார்ச் சேவை மட்டுமன்றி, உணவு விநியோகம், சரக்குப் போக்குவரத்துச் சேவைகளையும் வழங்கி வருகிறது.

இந்நிறுவனம், இந்தியாவில் வாடகை கார்ச் சேவையைத் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதனையொட்டி, ஊபர் நிறுவனம் அதன் கட்டமைப்புடன் இணைந்துள்ள ஓட்டுநர்களின் குழந்தைகளில் 1,000 பேருக்கு ஆரம்பக் கல்வியிலிருந்து முதுநிலைக் கல்வி வரை ஆகும் செலவை ஏற்றுக்கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்விக் கட்டணம், உபகரணங்கள், இணையச் சேவை உட்பட அக்குழந்தைகளின் கல்விக்குத் தேவைப்படும் அனைத்துச் செலவினங்களும் இதில் அடங்கும்.

மேலும், நிறுவனத்துடன் நீண்டகாலமாக இணைந்துள்ள 100 ஓட்டுநர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்குப் பாராட்டு விழாவை ஊபர் நடத்தியது.

“ஓட்டுநர்களின் பங்களிப்பு இல்லாமல் ஊபர் 10 ஆண்டுகாலம் மக்கள் சேவையில் நிலைத்து நின்றிருக்க முடியாது. நிறுவனத்தின் சாதனைகளை நினைத்துப் பார்க்கும் இவ்வேளையில், மக்கள் சேவையாற்ற எங்களுடன் இணைந்திருப்பவர்களுக்குத் திருப்பி அளிக்க வேண்டிய பங்கை முறையாக வழங்க கடமைப்பட்டுள்ளோம்,” என்று ஊபர் இந்தியா நிறுவனத் தலைவர் பிரப்ஜீத் சிங் கூறினார்.

“ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கான வாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என நம்புகிறோம். இந்த சிறு முயற்சி மூலமாக அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்யப் பங்காற்றுவதாக நம்புகிறோம்,” என்றார் அவர்.

ஊபரின் இச்செயல் சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டப்படுகின்றது.

குறிப்புச் சொற்கள்