‘ஆபரேஷன் அஜய்’: முதல் விமானத்தில் 212 பேர் புதுடெல்லி சென்றடைந்தனர்

‘ஆபரேஷன் அஜய்’: முதல் விமானத்தில் 212 பேர் புதுடெல்லி சென்றடைந்தனர்

1 mins read
2646f36c-3300-49af-ad67-30759514364e
‘ஆபரேஷன் அஜய்’ மீட்பு விமானம் மூலம் 200க்கு மேற்பட்டோர் புதுடெல்லி சென்றடைந்தனர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இஸ்‌ரேலுக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ எனும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்கீழ், முதல் விமானம் 200க்கு மேற்பட்ட இந்தியர்களுடன் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) காலை புதுடெல்லி சென்றடைந்தது.

பச்சிளங்குழந்தை உட்பட 212 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அவர்கள் முதல் விமானத்தில் ஏற்றிவரப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றதாகக் கூறப்பட்டது.

இஸ்‌ரேலுக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான கடும் மோதலைத் தொடர்ந்து, ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே விமானச் சேவைகளை ரத்து செய்தன.

அதையடுத்து, அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப உதவும் நோக்கில், கடந்த புதன்கிழமை ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இத்தகவலை வெளியிட்டார்.

இத்திட்டத்தின்கீழ், சிறப்பு விமானங்கள் மட்டுமன்றி, தேவைப்பட்டால் இந்தியக் கடற்படையின் கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.

இஸ்ரேலில் கிட்டத்தட்ட 18,000 இந்தியர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது. மாணவர்கள், பணிபுரிவோர், வணிகர்கள் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.

குறிப்புச் சொற்கள்