தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்நாடகாபோல தெலுங்கானாவிலும் வெற்றிக்கனி பறிக்க காங்கிரஸ் வியூகம்: ராகுல், பிரியங்கா களத்தில் இறங்கினர்

2 mins read
908feac4-0180-446d-93a1-de087f2fc8e0
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. - கோப்புப்படம்: ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30ஆம் தேதி 119 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதையடுத்து அங்கு காங்கிரஸ் கட்சி முழுவீச்சில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அங்கு பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

சிறப்பு விமானம் மூலம் புதன்கிழமை பிற்பகல் பெகும்பேட் விமான நிலையத்தில் வந்திறங்கிய காங்கிரஸ் தலைவர்கள், அங்கு பேருந்து மூலம் அருகேயுள்ள ராமப்பா கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ராகுல் காந்தி, பேருந்து மூலம் தெலுங்கானாவின் பல இடங்களில் தேர்தல் பிரசாரத்திலும் சந்திப்புக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.

தெலுங்கானா மக்களின் மனத்தில் இடம்பிடித்து இந்தத் தேர்தலில், கர்நாடகாவைப் போல் மாபெரும் வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.

அதையடுத்து அக்கட்சி, கவர்ச்சிமிகு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறது.

இந்நிலையில், திருமணம் செய்யும் மணப்பெண்ணுக்கு 10 கிராம் தங்கமும், ஏழைகளுக்கு ரூ.500 சமையல் காஸ் சிலிண்டர் மற்றும் மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்குவது எனவும் காங்கிரஸ் தீர்மானம் செய்துள்ளது. விரைவில் தெலுங்கானா காங்கிரஸ் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் பிஆர்எஸ், காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் தெலுங்கானா, தெலுங்கு தேசம், ஓவைசியின் கட்சி, பாஜக, கம்யூனிஸ்ட் மற்றும் ஜனசேனா கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி, பாஜக ஆகியவை தனித்தே போட்டியிடுகின்றன.

இந்நிலையில், முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதம் ரூ.5,000, சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.400க்கு, பெண்களுக்கு மாத உதவித் தொகை ரூ.3,000 வழங்கப்படும் என சந்திரசேகர ராவ் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் 106 பக்க தேர்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டது. அதில், விவசாயிகள், பெண்கள், அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து சமூகத்தினருக்கும் பயனளிக்கும் வகையிலான 59 வாக்குறுதிகளை அக்கட்சி பட்டியலிட்டுள்ளது. ரூ.25 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு, ஓபிசி சமூகத்துக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்துக்கென ஐபிஎல் அணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியையும் காங்கிரஸ் அளித்துள்ளது.

இவைதவிர, ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை, ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், பள்ளிக் கல்வி இலவசம், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் போன்ற வாக்குறுதிகளையும் காங்கிரஸ் வாரி வழங்கியுள்ளது.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இளைஞர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்