கோழிக்கோடு: கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் கேரள மாநிலக் காங்கிரஸ் கட்சி நவம்பர் 23ஆம் தேதி பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஒற்றுமைப் பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.சுதாகரன் அறிவித்துள்ளார். இந்தப் பேரணியை அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தொடங்கி வைக்கிறார்.
“மதச்சார்பற்ற ஜனநாயக சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் நவம்பர் 23ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கோழிக்கோடு கடற்கரையில் ஒருங்கிணைந்து பேரணியில் கலந்துகொள்வர். பாலஸ்தீன ஆதரவு குறித்த வரலாற்றுப் பேரணியாக இது அமையும்,” என்று திரு சுதாகர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திரு சுதாகர், “பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் அரசால் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் சொந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. பாலஸ்தீனர்கள் அவர்களின் சொந்த நாட்டில் வசிக்கும் உரிமையை மறுக்கக்கூடிய எந்த நடவடிக்கையையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது என்றார்.
மேலும் அவர் “முந்தைய காங்கிரஸ் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரையிலான அரசுகள், கண்ணியத்துடன் அமைதியாக வாழ்வதற்காக பாலஸ்தீன மக்கள் நடத்திவரும் போராட்டங்களை ஆதரித்து வந்துள்ளன. அவற்றின் தொடர்ச்சியாகவே இந்தப் பேரணி நடைபெற உள்ளது.
“நரேந்திர மோடி அரசின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கை நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் கொள்கைக்கு எதிரானது,” என்றார் திரு சுதாகர்.
இதற்கு முன்னதாக, கேரள மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நவம்பர் 11ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


