உலகின் மாசுபட்ட 10 நகர்கள் பட்டியலில் மூன்று இந்திய நகர்கள்; தொழிலாளர்கள் பாதிப்பு

1 mins read
e67b0e57-73d8-4abb-932d-a7df8e602c5c
பனிப்புகை சூழ்ந்திருக்கும் நிலையில், புதுடெல்லியில் இந்தியா கேட் பகுதியில் காணப்படும் மக்கள். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: உலகின் மாசுபட்ட 10 நகர்களில் இந்தியத் தலைநகர் புதுடெல்லியுடன் திங்கட்கிழமை காலை மேலும் இரு இந்திய நகர்கள் இணைந்துள்ளன.

தீபாவளிக்கு மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அடுத்த நாள் காற்றில் புகை சூழ்ந்தது.

உலகின் மாசுபட்ட 10 நகர்களின் பட்டியலில் வழக்கம்போல முதலிடத்தைப் பிடித்துள்ள புதுடெல்லியில் காற்றுத் தரக் குறியீடு 420 எனப் பதிவானது. சுவிஸ் குழுமம் ‘ஐகியூஏர்’ பொறுத்தமட்டில், புதுடெல்லி ‘ஆபத்தான’ பிரிவில் இடம்பெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து புதுடெல்லியில் கடும் பனிப்புகை சூழ்ந்தது. நள்ளிரவுக்குப் பிறகு அங்கு காற்றுத் தரக் குறியீடு 680 எனப் பீதியை ஏற்படுத்தும் நிலைக்கு உயர்ந்தது.

மாசுபட்ட நகர்கள் பட்டியலில் புதுடெல்லியுடன் இப்போது கோல்கத்தாவும் நிதி நடுவமான மும்பையும் இணைந்துள்ளன. காற்றுத் தரக் குறியீடு 196 எனப் பதிவான கோல்கத்தா நான்காம் இடத்திலும் 163 எனப் பதிவான மும்பை எட்டாவது இடத்திலும் வந்தன.

இதற்கிடையே, உலகளவில் மாசுபட்ட தலைநகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லியில், கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையும் வருமானமும் இன்றி தவிப்புக்கு ஆளாகி உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

நாள்தோறும் குறைந்தபட்சம் சம்பாதிக்கும் இத்தொழிலாளர்கள் கடந்த பத்து நாள்களாக வேலையின்றி முடங்கியுள்ளனர்.

இரண்டு கோடி மக்கள் வசிக்கும் இந்திய தலைநகரில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு அபாயகர அளவில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்