மேற்கு வங்கம்: மோசமான சாலையால் கட்டிலில் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு

மேற்கு வங்கம்: மோசமான சாலையால் கட்டிலில் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு

1 mins read
f11bee0f-0a3d-4674-932b-54ec4bb35c8b
படம்: - கோப்புப் படம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மால்தங்கா கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வராததால், கயிற்றுக் கட்டிலில் மருத்துவமனைக்குத் தூக்கி செல்லப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ளது மால்தங்கா கிராமம். இங்கு வசித்த மமோனி ராய்(25) என்ற பெண்ணுக்கு சில நாள்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது.

கிராமத்தில் உள்ள வைத்தியரிடம் நாட்டு மருந்து வாங்கி கொடுத்துள்ளனர். இதில் காய்ச்சல் குணமடையவில்லை. அவரது உடல் நிலை மோசமானதால், அவரது கணவர் கார்த்திக் ராய் ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளார்.

மால்தங்கா கிராமத்தில் சாலை மிக மோசமாக இருப்பதால், அங்கு ஆம்புலன்ஸ் மற்றும் வாடகை வாகனத்தை ஓட்டிச் செல்ல ஓட்டுனர்கள் மறுத்துவிட்டனர். இதனால் கார்த்திக் ராய் மற்றும் உறவினர்கள் மமோனி ராயைக் கட்டிலில் படுக்க வைத்து நாலரை கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மமோனி ராய் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மமோனி ராய் கட்டிலில் தூக்கிச் செல்லப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

இது குறித்து கருத்து தெரிவித்த மால்டா மாவட்ட அதிகாரி, ‘‘ஆரம்பத்தில் முறையான சிகிச்சை மேற்கொள்ளாமல் ஆபத்தான நிலையில் மமோனி ராய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது மிகவும் துரதிர்ஷ்டமான சம்பவம். ஆம்புலன்ஸ் வசதிக்கு, குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டிருக்கலாம். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

குறிப்புச் சொற்கள்