விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீ; எரிந்து சாம்பலான படகுகள்

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீ; எரிந்து சாம்பலான படகுகள்

1 mins read
9579d038-b103-4faf-becb-9b0ed3ae931e
திங்கட்கிழமை (நவ. 20) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 25க்கு மேற்பட்ட விசைப் படகுகள் கருகி சேதமடைந்தன. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் திங்கட்கிழமை (நவ. 20) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏறக்குறைய 25 விசைப் படகுகள் கருகியதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தீயணைப்பு இயந்திரங்கள் தீயை அணைக்கப் போராடிய நிலையில், இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பலைப் பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது.

தீயில் கருகிய படகுகள் ஒவ்வொன்றும் 15 லட்சம் ரூபாய்க்குமேல் மதிப்புடையவை என்றும் சம்பவத்தால் ஏற்பட்ட மொத்த சேதம் கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய்க்குமேல் என்றும் என்டிடிவி தகவல் வெளியிட்டுள்ளது.

மீன்பிடிப் படகு ஒன்றில் தீ மூண்டதாகவும் பின்னர் அது மற்ற படகுகளுக்கும் பரவியதாகவும் காவல்துறை கூறியது. படகுகளில் டீசல், எரிவாயுக் கலன்கள் இருந்ததாலும் வேகமாக வீசிய காற்றாலும் தீ மற்ற படகுகளுக்குப் பரவியதாக அது குறிப்பிட்டது.

சிலர் வேண்டுமென்றே தீ மூட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. படகு ஒன்றில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சியால் தீ மூண்டிருக்கலாம் என்றும் மீனவர்கள் சிலர் சந்தேகிக்கின்றனர்.

தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது. தீச்சம்பவம் நடந்த மீன்பிடித் துறைமுகம் விசாகப்பட்டினம் துறைமுக ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் துறைமுகம், மீன்வளத்துறை, காவல் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்புகள் இணைந்து விசாரணை மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்