தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உத்தராகண்ட் சுரங்க விபத்து: மீண்டும் நிறுத்தப்பட்ட மீட்புப் பணி

2 mins read
2c57138f-5bb6-46f8-84b8-d63acb9cd273
தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கப்பாதையின் வாயிலுக்கு அருகே தற்காலிகமாக கோயில் அமைத்து வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

சில்க்ராயா: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் அமைக்கப்படும் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் சுரங்கப் பாதை கட்டப்படுகிறது. நவம்பர் 12ஆம் தேதி அதில் ஒரு பகுதி இடிந்துவிழுந்ததில் 41 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்துவிடும் என்ற நிலையில், வெள்ளிக்கிழமை (நவ. 24) மீண்டும் அப்பணி நிறுத்திவைக்கப்பட்டது.

துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாற்றால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களுக்கு வெளிச்சம், உயிர்வாயு (ஆக்சிஜன்), உணவு, நீர், மருந்துகள் ஆகியவை அனுப்பப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இடிபாடுகளில் பாறைகள், கற்கள், உலோகப் பகுதிகள் ஆகியவற்றுக்கு இடையே துளையிட்டு உலோகக் குழாய் ஒன்றைப் பொருத்தி அதன் வழியே 41 பேரையும் மீட்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் வியாழக்கிழமை, 25 டன் எடையுள்ள துளையிடும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ள மேடை சேதமடைந்ததால் அந்தப் பணியைத் தொடர முடியவில்லை என்று மீட்புப் பணித் தலைவர் கூறினார்.

கிட்டத்தட்ட 60 மீட்டர் நீளத்துக்குக் காணப்படும் இடிபாடுகளில் இறுதி 10 மீட்டர் நீளத்துக்கு துளையிடும் பணி எஞ்சியுள்ளது.

துளையிடும் இயந்திரத்தின் மேடை பழுதுபார்க்கப்பட்ட உடனே பணி மீண்டும் தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பிறகு அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தத் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தர்காசி மாவட்ட சுகாதார நிலையம் ஒன்றில் 41 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களை அங்கு கொண்டுசெல்ல சுரங்கப்பாதைக்கு அருகில் 41 அவசர மருத்துவ வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்