தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாரணாசியில் மீண்டும் காசி தமிழ்ச் சங்கமம்

2 mins read
54d80d93-467b-4800-8b98-84848204fb1a
கடந்த ஆண்டு நடந்த முதல் தமிழ் சங்கமத்தில் காசி விஸ்வநாதர் கோயிலில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்-2’ நடைபெற உள்ளது.

கடந்த முறையைப்போல், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் டிசம்பரில் 15 நாள்களுக்கு நடத்தப்பட உள்ளது.

கடந்த ஆண்டு முதல்முறையாக தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பை சேர்ந்த 2,500 பேர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த செலவில் வந்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த முறையை போல் ‘காசி தமிழ்ச் சங்கமம்-2’ நடைபெற உள்ளது. இம்முறையும் உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சகம் நடத்துகிறது. ஆனால், இம்முறை 15 நாள்களாகக் குறைக்கப்பட்டு, டிசம்பர் 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொள்ள வசதியாக 12 சிறப்பு ரயில்கள் சென்னை, ராமேஸ்வரம் மற்றும் மதுரையில் இருந்து சேவையாற்ற உள்ளன.

“இரண்டாவது காசி தமிழ்ச் சங்கத்திற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் காணொளி மூலம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சு செயலாளர் கே.சஞ்சய் மூர்த்தி, வாரணாசி ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம், இந்த நிகழ்ச்சியின் தேசிய அமைப்பாளரான பேராசிரியர் சாமு கிருஷ்ண சாஸ்திரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இரண்டாவது காசி தமிழ்ச் சங்கமத்தில் சில மாற்றங்கள் செய்யவும் இக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது,” என்று மத்திய கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்ததாக ‘த இந்து’ நாளிதழ் தகவல் வெளியிட்டது.

இரண்டாவது சங்கமத்தில் கலந்துகொள்பவர்களுக்கு அனைத்து வகையான இந்திய உணவும் பரிமாறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலியின் கடையநல்லூரை சேர்ந்த அதிகாரி ராஜலிங்கம் யோசனைப்படி கங்கையின் நமோ கரையில் இந்த சங்கமம் நடைபெற உள்ளது. இது, நகரின் மத்தியப் பகுதியில் இருப்பதால், முதல் நிகழ்ச்சி நடைபெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு வந்ததை விட அதிக பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சங்கமத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

கடந்த முறையை போலவே, தமிழக மடங்களின் ஆதினங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

குறிப்புச் சொற்கள்