சுரங்கத்தில் சிக்கியவர்களை நன்கு கவனித்துக்கொண்ட மூத்த ஊழியருக்கு பிரதமர் மோடி பாராட்டு

சுரங்கத்தில் சிக்கியவர்களை நன்கு கவனித்துக்கொண்ட மூத்த ஊழியருக்கு பிரதமர் மோடி பாராட்டு

படம்: ஊடகம்

29 Nov 2023 - 6:03 pm

2 mins read

புதுடெல்லி: “நான்தான் வயதில் மூத்தவன், எனவே உங்களையெல்லாம் வெளியேற்றிய பின்னர் நான் கடைசியில் வருகிறேன்,” என்று சுரங்கத்தில் சிக்கியிருந்த சக ஊழியர்கள் அனைவரையும் முதலில் வெளியேற உதவி செய்த மூத்த ஊழியரை பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட தலைவர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி சுரங்கத்தில் நவம்பர் 12ஆம் தேதி சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களை மீட்கப் போராடி இறுதியாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒருவழியாக மீட்டனர்.

சுரங்கத்தில் சிக்கிக் கொண்டவர்களில் மூத்த ஊழியரும் கண்காணிப்பாளருமான கப்பார் சிங் நேகி என்பவர், சக ஊழியர்களுக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் இருந்து வந்துள்ளார். அவர் மற்ற ஊழியர்களுக்கு யோகப் பயிற்சியும் தியானம் செய்வது எப்படி என்றும் கற்றுத் தந்துள்ளார்.

மேலும், சுரங்கத்தில் சிக்கியுள்ள ஊழியர்கள் உடல் மற்றும் மனரீதியாக திறம்படச் செயல்படுகிறார்களா என உறுதிப்படுத்தி வந்ததுடன், அவர்களை அமைதியாக வழிநடத்தியுள்ளார்.

சக ஊழியர்களிடம் கடைசியாக மீட்கப்படுபவன் நானாகவே இருப்பேன் எனக் கூறி அவர்களுடைய பாதுகாப்பில் மிகக் கவனமாகவும் ஈடுபாட்டுடனும் இருந்திருக்கிறார்.

கப்பார் சிங்கின் சகோதரரான ஜெயமல் சிங் நேகி மற்றும் ஊழியர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் வயதில் மூத்தவன். அதனால், சுரங்கத்தில் இருந்து கடைசியாக வருபவன் நானாகவே இருப்பேன் என கப்பார் சிங் சொன்னார்,” என்று குறிப்பிட்டனர்.

“சுரங்கத்தில் இரவும் பகலும் இருட்டறைக்குள் அடைந்து கிடந்த ஊழியர்களை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் வைத்துக்கொள்வதற்கு திரு நேகி பாடுபட்டார். லுடோ மற்றும் செஸ் போன்ற விளையாட்டுகள் வாயிலாகவும் யோகா போன்ற பயிற்சிகளின் மூலமும் ஊழியர்களை மகிழ்ச்சியாகப் பார்த்துக்கொண்டார்,” என்று திரு நேகியின் சக ஊழியர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்