புதுடெல்லி: ஐந்து மாநிலத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18 விழுக்காட்டினர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் இம்மாதம் தேர்தல் நடைபெற்றது. தெலுங்கானாவில் வியாழக்கிழமையன்று தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இத்தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐந்து மாநிலத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 18 விழுக்காட்டினர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 12% பேர் தங்கள் மீது கடும் குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு தருவதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் 2020ஆம் ஆண்டு அறிவுறுத்தியது.
குறிப்பாக, தெலுங்கானாவில் குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 45 வழக்குகள், 27 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 7 கொலை வழக்குகளும் இதில் அடங்கும்.

