புதுடெல்லி: இயற்கை பேரிடர் நிவாரண நிதியாக குஜராத் மாநிலத்திற்கு ரூ.338 கோடியும் இமாச்சலப் பிரதேசத்துக்கு ரூ.633 கோடியும் வழங்க மத்திய இந்திய உள்துறை அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சு ‘எக்ஸ்’ சமூக ஊடகம் மூலம் செவ்வாய்க்கிழமை தகவல் வெளியிட்டதாக ‘த இந்து’ நாளிதழ் குறிப்பிட்டது.
“குஜராத்துக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.338.24 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது. பிபர்ஜாய் புயலால் குஜராத் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்தப் பேரிடரின்போது உயிரிழப்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது,” என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
“கடும் புயலுக்குப் பிறகு மாநில அரசு உதவி கேட்கும்வரை காத்திருக்காமல் சேத விவரங்களை மதிப்பிட மத்தியக் குழுவை உள்துறை அமைச்சு அனுப்பி வைத்தது. குஜராத் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு முதல் தவணையாக ஏற்கெனவே ரூ.584 கோடி விடுவித்துள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சின் மற்றொரு பதிவில், “இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.633.73 கோடி கூடுதல் நிதியுதவி வழங்க ஒப்புதல் கிடைத்துள்ளது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இமாச்சலப் பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அங்கு சேத விவரங்களை மதிப்பிட உடனடியாக மத்தியக் குழு அனுப்பி வைக்கப்பட்டது. அம்மாநிலத்திற்கு இரு தவணைகளாக ரூ.360.80 கோடி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் தென் இந்திய மாநிலங்கள் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டன. அவற்றில் தமிழகத்தின் சென்னை நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நகரின் பல முக்கிய இடங்கள் வெள்ளத்தால் சேதமடைந்தன. தமிழகமும் நிவாரண நிதி கேட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் வழங்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

