தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெலுங்கானா அமைச்சராகப் பொறுப்பேற்றார் மாவோயிஸ்ட் முன்னாள் பெண் உறுப்பினர்

2 mins read
3145d4cd-a39f-49b7-9757-6ab1b44b9bb4
அனுசூய சீதக்கா. - படம்: ஊடகம்
multi-img1 of 2
-

ஹைதராபாத்: தெலுங்கானாவில் முன்னாள் பெண் மாவோயிஸ்ட் ஒருவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக அனுசூய சீதக்கா (52 வயது) என்ற அந்தப் பெண்மணி இருபது ஆண்டுகாலம் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்திருந்தார்.

ஆதிவாசி குடும்பத்தில் பிறந்தவர் அவர், பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததுடன், சிறு வயதிலேயே பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர்.

கடந்த 1988ஆம் ஆண்டு நக்ஸலைட் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அனுசூய சீதக்கா, ஏறக்குறைய 15 ஆண்டுகள் வரை அந்த இயக்கத்தின் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

எனினும், 1997ஆம் ஆண்டு அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திர மாநில அரசு, மவோயிஸ்ட்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தது.

அச்சமயம் ஸ்ரீராமுலு என்பவரை திருமணம் செய்துகொண்டு ஒரு மகனையும் பெற்றெடுத்த அனுசூய சீதக்கா, வனப்பகுதியில் தலைமறைவாக இருந்தார்.

பொது மன்னிப்புக்குப் பின்னர் கடந்த 2001ஆம் ஆண்டில், ஹைதராபாத்தில் சட்டம் படித்து, ஆய்வுக்குப் பின்னர் முனைவர் பட்டமும் பெற்றார் அனுசூய சீதக்கா.

பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியல் களப்பணியாற்றத் தொடங்கியவர், கடந்த 2009ஆம் ஆண்டு தெலுங்கு தேசம்கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.

இதையடுத்து, கடந்த 2017இல் தெலுங்கு தேசம் கட்சியை விட்டு விலகிய அனுசூய சீதக்கா, நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநில பஞ்சாயத்து ராஜ் துறை, கிராமிய வளர்ச்சி துறை, பெண் மற்றும் சிசு நலத்துறை ஆகிய மூன்று துறைகளுக்கு அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

மக்கள் ஆதரவு இருந்தால் மாவோயிஸ்ட் இயக்க உறுப்பினராக இருந்த ஒருவர் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்க முடியும் என தெலுங்கானா ஊடகங்கள் அனுசூய சீதக்காவைப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்