ரயில் கதவில் சேலை சிக்கியதால் பெண் பலி; விசாரணைக்கு உத்தரவு

2 mins read
aa60d1e4-9768-49dc-b846-a47fd4c0bb8c
இரண்டு குழந்தைகளின் தாயான ரீனா, சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். - படம்: இந்தியா டைம்ஸ்

புதுடெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலில் ஏறிய ரீனா, 35, என்ற பெண்ணின் சேலை ரயில் பெட்டியின் கதவில் சிக்கிக்கொண்டதால், அவர் நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

கதவில் சேலை சிக்கிய பிறகும் மெட்ரோ ரயில் பெட்டியின் கதவு ஏன் திறக்கவில்லை என்பது குறித்து டெல்லி மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் துயரச்சம்பவம் டெல்லி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லி இந்தர்லோக் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த ரயிலில் கடந்த வியாழக்கிழமை மாலை ரீனா ஏறியுள்ளார். ஏறிய வேகத்தில் திடீரென வெளியேறி உள்ளார். அப்போது ரயில் பெட்டியின் கதவு மூடிக்கொள்ளவே அதில் அவரது சேலை சிக்கிக்கொண்டது.

சில விநாடிகளில் ரயில் வேகமெடுக்க கதவில் சிக்கிய சேலையுடன் நடைமேடையில் பல மீட்டர் தூரத்துக்கு ரீனா இழுத்துச் செல்லப்பட்டார்.

இதைக் கண்டு ரயிலிலும் நடைமேடையிலும் இருந்த இதர பயணிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர்.

பின்னர், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ரீனா சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இரு நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

‘‘கணவர் கடந்த 2014ல் காலமாகிவிட்ட நிலையில், காய்கறிகள் விற்று இரு குழந்தைகளைக் காப்பாற்றி வந்தார் ரீனா. இப்போது, பெற்றோர் இல்லாத அனாதைகளாக குழந்தைகள் ஆகிவிட்டனர்.

“எனவே, டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கவேண்டும்,’’ என்று ரீனாவின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஏராளமானோர் ரீனாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்கு ஏற்பட்ட கதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்