புதுடெல்லி: டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் தமக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமலாக்கத்துறைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தாம் சட்டத்தை மதிக்கும் மனசாட்சி உள்ள சாதாரண குடிமகன் என்றும் தமது வாழ்க்கை வெளிப்படையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சட்டத்திற்கிணங்க அனுப்பப்படும் எந்தவோர் அழைப்பாணையையும் எதிர்கொள்ளத் தவற மாட்டேன்.
“ஆனால் இந்த வழக்கில் என் மீதான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது.
“எதிர்க்கட்சிகளின் குரலை அடக்க நினைக்கும் அரசியல் சூழ்ச்சியாளர்களின் உத்தரவுப்படி அனுப்பப்பட்டுள்ளது,” என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

