ஹைதராபாத் மருத்துவமனையில் மோசமான தீ விபத்து; உயிர்ச்சேதம் தவிர்ப்பு

1 mins read
5498e2d9-da04-43f7-9a85-9fdb646cc5ba
ஹைதராபாத்தின் குடிமல்கப்பூரில் உள்ள அங்குரா மகளிர், குழந்தைகள் மருத்துவமனை. - படம்: என்டிடிவி

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையான அங்குரா மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 23) மாலை திடீரென தீ பற்றி எரிந்தது. மேல் மாடியில் ஏற்பட்ட தீ மளமளவென கீழ்த் தளங்களுக்குப் பரவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு 15 நிமிடங்களுக்குள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீப்பற்றி எரிந்த தளங்களில் இருந்த நோயாளிகளும் ஊழியர்களும் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

தீயணைப்பு வீரர்களின் அதிரடி நடவடிக்கையால் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள், நோயாளிகள் என எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

மகளிர், குழந்தைகளுக்கான அங்குரா மருத்துவமனை ஹைதராபாத்தின் குடிமல்கப்பூர் பகுதியில் உள்ளது.

மருத்துவமனைக் கட்டடத்தின் மேல் மாடியில் இருந்த எல்இடி விளக்குகளில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீவிபத்துக்குக் காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தீவிபத்து தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்