ஹைதராபாத்: தெலுங்கானா முதல் அமைச்சர் ஏ.ரேவந்த் ரெட்டி, அம்மாநிலத்தில் தற்காலிகப் பணிகளில் உள்ள அமைப்புசாரா ஊழியர்களுக்கு இலவச மருத்துவ, விபத்து காப்பீட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
டாக்சி, ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்கள், உணவு மற்றும் மளிகைச் சாமான் விநியோகம் உள்ளிட்ட தற்காலிகப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் பயனளிக்கும்.
தற்காலிக ஊழியர்கள் மாநில அரசாங்கத்தின் சேவைகளை எளிதில் பெறும் வகையில் செயலி ஒன்று விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
அந்தச் செயலியை டாக்சிக்குப் பதிவு செய்யப் பயன்படுத்தும் செயலியைப் போன்று மிக எளிதாகப் பயன்படுத்தலாம். டி-ஹப் என்னும் நிறுவனம் அந்தச் செயலியை உருவாக்கியுள்ளது. நம்பள்ளி என்னும் இடத்தில் உள்ள கண்காட்சி அரங்கில் தற்காலிகத் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார் முதல்வர் ரேவந்த். அப்போது தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்தார்.
தற்காலிகமாகப்பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலவாரியம் ஒன்று விரைவில் நிறுவப்படும் என்றும், அது அவர்களுக்கான அனைத்து நலத் திட்டங்களையும் செயல்படுத்துவதை கவனித்துக்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
தற்காலிக ஊழியர்களுக்கு வேலை வழங்கவும் சமூகப் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கெனவே உறுதி அளித்திருந்தார். அதன் தொடர்பில் அரசாங்கம் விரைவில் கொள்கை முடிவை எடுக்கும் என்றார் முதல்வர் ரேவந்த்.