உத்தராகண்டில் வன்முறை: 4 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்

2 mins read
b66a52d2-5255-4f95-a103-5a03916ae9db
உத்தராகண்ட் மாநிலத்தின் வான்புல்ரா பகுதியில் காவல்துறைக்கும் அப்பகுதி மக்களுக்கும் நடந்த சண்டையில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர். - படம்: ஊடகம்

ஹல்துவானி: உத்தராகண்ட் மாநிலத்தின் வான்புல்ரா பகுதியில் வெள்ளிக்கிழமை (9.2.24) காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே நடந்த சண்டையில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். 250க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தின் வான்புல்ரா பகுதியில் உள்ள அரசாங்க நிலத்தில் சட்ட விரோதமாக மதரசா கட்டடம் கட்டப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றம் அக்கட்டடத்தை இடிப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 9) அந்தக் கட்டடத்தை இடிப்பதற்காக மாவட்ட நிர்வாக மற்றும் நகராட்சித்துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் வான்புல்ரா பகுதிக்குச் சென்றனர். மதரசா கட்டடத்தை இடிப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும் அதிகாரிகள் அதைப் பொருட்படுத்தாமல் அந்தக் கட்டடத்தை இடிக்கும் பணியைத் தொடங்கினர்.

இதனால் கோபமடைந்த மக்கள் அதிகாரிகள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். அங்கு போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகளைத் தள்ளிவிட்டு அந்தக் கட்டடத்தை இடிக்கவிடாமல் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அதிகாரிகளைத் தடுத்தனர்.

அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை அதிகாரிகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். அதனால் ஆத்திரமடைந்த மக்கள், அதிகாரிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டதுடன் காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

அப்பகுதி மக்களுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த சண்டை மற்றும் தீ வைப்புச் சம்பவங்களில் 50க்கு மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர். மாவட்ட நிர்வாக, நகராட்சி அதிகாரிகள், செய்தியாளர்கள் என ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அங்குள்ள காவல்நிலையத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதையடுத்து அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

தீவைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவத்தில் 20க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் ஒரு பேருந்தும் தீக்கிரையாயின என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

இதையடுத்து ஹல்துவானி பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அப்பகுதியில் மக்கள் மேலும் கலவரங்களில் ஈடுபடாமல் கட்டுப்படுத்தும் வகையில் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுட அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அங்குள்ள கல்விநிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இணையச் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் நகராட்சி அதிகாரிகள் மதரசா கட்டடத்தை இடிக்கும் பணியைத் தொடங்கினர்.

சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டதால்தான் அப்பகுதியில் நிலைமை மோசமாகியுள்ளது என்று முதல்வர் புஷ்கர் தெரிவித்துள்ளார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பதற்றமான அப்பகுதிக்கு மேலும் அதிகமான காவல் படையும் மத்திய படையும் அனுப்பி வைக்கப்பட உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்