விவசாயிகள் சங்கம்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை

விவசாயிகள் சங்கம்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை

2 mins read
04204f6c-fd44-45ef-9960-f666fd65555a
ஹரியானாவின் தலைமைக் காவல்துறை கண்காணிப்பாளர், போராட்டத்தின்போது கண்ணீர்ப்புகைக் குண்டு பயன்படுத்தப்படமாட்டாது என்று கூறியிருந்தார். இருந்தும் எங்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது என்று கூறினார் விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் மத்திய அரசுக்குத் துளியும் அக்கறையில்லை என்று விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை விவசாய சங்கத்தினர் மத்திய அரசுடன் 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒப்பந்த அடிப்படையில் வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து விவசாயிகளிடம் முன்மொழிந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஆனால், மத்திய அரசின் புதிய முன்மொழிவை நிராகரிப்பதாக விவசாய அமைப்புகள் கூட்டாக இணைந்து தெரிவித்துள்ளன.

இந்நிலையில், விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் செவ்வாய்க்கிழமை (பிப்.20) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அரசாங்கத்தின் பேச்சின் மூலம் போராட்டம் டெல்லிக்குள் நுழைவதைத் தடுப்பதே அதன் நோக்கம் என்பது புலப்படுகிறது.

மத்திய அரசுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்ட விருப்பம் இல்லை என்றால் நாங்கள் டெல்லி நோக்கி முன்னேறித்தான் ஆக வேண்டும்.

“நாங்கள் மேற்கொண்டுள்ள அறவழிப் போராட்டத்தைத் தடுக்காமல் அனுமதிக்க வேண்டும். எங்கள் பேரணியைத் தடுக்க ஹரியானாவில் காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பார்த்தால் அது காஷ்மீரைத்தான் நினைவுபடுத்துகிறது.

“நாங்கள் டெல்லியை நோக்கிச் சென்றபோது துப்பாக்கிச் சூடு நடந்தது. டிராக்டர் டயர்களைக் குறிவைத்து சுட்டனர்.

“கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட மாட்டாது என ஹரியானாவின் காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் கூறியிருந்தார். இருப்பினும் எங்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீசப்பட்டது. இனி, என்ன நடந்தாலும் நாங்கள் முன்னேறுவோம். அதேபோல் இனி நடப்பவை அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்பு.

“வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் தர மறுத்தால், தொடர்ந்து விவசாயிகள் சுரண்டப்படுவர். நாங்கள் ஒருபோதும் அதை அனுமதிக்க மாட்டோம்.

“வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு மத்திய அரசு பாமாயில் இறக்குமதி செய்து வருகிறது. அந்த எண்ணெய் மக்களின் உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும்.

“அதற்கு மாறாக, இங்குள்ள விவசாயிகளுக்கு எண்ணெய் வித்துகளைப் பயிரிடக் கொடுத்து உதவினால் நன்மை பயக்கும்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்