புதுடெல்லி: டில்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக புறப்பட்ட நிலையில், ஹரியானா எல்லை பகுதியான ஷம்பு, டில்லியை ஒட்டிய கனூர் பகுதியில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால், பதற்றம் நிலவுகிறது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகள் புதன்கிழமை (பிப்ரவரி 21) டில்லியை நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். இதில் 14 ஆயிரம் பேர், 1200 டிராக்டர், 300 கார்களில் அணிவகுத்து வந்தனர்.
மாலையில் ஷம்பு, கனோரி எல்லையை விவசாயிகள் அடைந்தபோது, அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. பாதுகாப்புப் படையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.
ஹரியானா எல்லைப் பகுதியான ஷம்பு எல்லையில், டெல்லியை நோக்கிச் செல்ல முடியாதபடி பாதுகாப்புப் படையினர் ஏற்படுத்திய தடைகளை உடைத்தெறிய முயன்ற விவசாயிகளை நோக்கி ஹரியானா காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் தடுத்தனர்.
இ்தனால், ஏராளமான விவசாயிகள் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே கனோரி எல்லையில் ஒருவர் பலியானதாகவும் 12 விவசாயிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே 4 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், 5ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னதாக, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய 4ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்வதாக மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. விவசாயிகள் நலன் சாரா இந்த முன்மொழிவுகளை நிராகரிப்பதாக விவசாயிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
வடஇந்தியாவில் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13ஆம் தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நான்கு கட்டமாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு சில பரிந்துரைகளை முன்வைத்தது.
விவசாயிகள் மத்திய அரசின் அந்தப் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு தங்களது போராட்டத்தைக் கைவிட மறுத்து, டெல்லியை நோக்கி தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்தனர். விவசாயிகளைத் தடுக்கும் விதமாகவும், அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் ஹரியானா மாநில எல்லைப் பகுதியில் ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்
காவல்துறையும், துணை ராணுவப்படையினரும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாத வண்ணம் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
டிக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல அடுக்கு தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். கான்கிரீட் தடுப்புகள், வாகனங்கள் முன்னேற இயலாத வண்ணம் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட தடுப்புகள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். காசிப்பூர் எல்லையில் இரண்டு முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.
சாலை மார்க்கம் மட்டுமல்லாமல் ஆறு, கால்வாய் வழியாகக் கூட விவசாயிகள் முன்னேறிவிடக்கூடாது என்று காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்தமுறை டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேற முயன்றபோது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில் இந்தமுறை அதை எதிர்கொள்ளும் வகையில் விவசாயிகள் முகத்தில் கவசம் அணிந்து தயாராகி வருகின்றனர்.
சாக்குகளை தண்ணீரில் நனைத்து வைத்துள்ளனர். கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டால் அவற்றின் மீது போட்டு புகையை மட்டுப்படுத்த தயாராக உள்ளனர்.
மேலும் டிராக்டர்களையே தங்குமிடம் போல் தயார் செய்தும் வைத்துள்ளனர். எப்படியாவது டெல்லி நோக்கி முன்னேறிவிட வேண்டும் என்று அனைத்து முன்னேற்பாடுகளையும் அவர்கள் செய்து வருகின்றனர்.
விவசாயிகள் ஒடுக்கப்படுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
“விவசாயிகளை ஒடுக்கும் அரசாங்கத்தை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஹரியானாவில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் செய்த குற்றம்தான் என்ன? உங்களை நாங்கள் பிரதமராக்கியதுதான் குற்றமா?
“எங்களைப் பாதுகாப்புப் படைகள் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அரசியல் சாசனத்தை மதித்து நடங்கள். நாங்கள் அறவழியில் அமைதியாக டெல்லியை நோக்கி முன்னேற அனுமதியுங்கள். அது எங்களின் உரிமை” என்று விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார்.
‘சாதகமான முடிவுதான் எங்கள் இலக்கு’
விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தாலேவால் கூறுகையில், “எங்கள் இலக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது அல்ல. எங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்த்து எங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்.
“ஆனால், மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் கிடப்பில்போடும் உத்தியைக் கடைப்பிடிக்கிறது. எல்லையில் பல அடுக்கு தடுப்புவேலிகளை அமைத்து நாங்கள் டெல்லியை நோக்கி முன்னேறவிடாமல் தடுக்கிறது,” என்று மத்திய பாஜக அரசு மீது குற்றம் சுமத்தினார்.

