விவசாயிகள் போராட்டம் இரண்டு நாள்களுக்கு ஒத்திவைப்பு

விவசாயிகள் போராட்டம் இரண்டு நாள்களுக்கு ஒத்திவைப்பு

1 mins read
a72dac37-b4a0-41bf-9aa4-ed228a9cc6ae
விவசாயிகள் புதன்கிழமை போராட்டம் நடத்தியபோது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த முக்கிய கோரிக்கையுடன் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி கடந்த 13ஆம் தேதி பேரணியைத் தொடங்கினர்.

ஆனால், இந்தப் பேரணியை ஹரியானா எல்லையான ஷாம்பு, கானாரி ஆகிய இடங்களில் அந்த மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் அங்கேயே அமர்ந்து போராடினர்.

இன்னும் ஒருசில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இந்தப் போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விவசாயச் சங்கத்தினர் மத்திய அமைச்சர்களுடன் பிப்ரவரி 8, 12, 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். எனினும், அது தோல்வியிலேயே முடிந்தது.

இந்த நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் ‘டெல்லி சலோ’ போராட்டம் இரு நாள்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு 5வது முறை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி வெள்ளிக்கிழமை மாலை முடிவு செய்யப்படும் என்று விவசாயச் சங்கங்கள் அறிவித்தன.

குறிப்புச் சொற்கள்