விவசாயிகள் போராட்டத்தில் கைகோத்துள்ள ‘நிகாங்’ சீக்கியப் போராளிகள்

விவசாயிகள் போராட்டத்தில் கைகோத்துள்ள ‘நிகாங்’ சீக்கியப் போராளிகள்

2 mins read
92fbbd0e-8051-4bc5-b164-d46a9c09fc57
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் விவசாயிகளைப் பாதுகாக்கும் ‘நிகாங் சீக்கியர். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

பஞ்சாப்: இந்தியாவில் ‘டெல்லி சலோ 2.0’ எனும் பேரணியில் கலந்துகொண்டு பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாக்க முன்வந்துள்ளது ‘நிகாங் சீக்கியர்கள்’ எனும் போராளிகள் குழு.

நீல நிற ஆடையணிந்து வாள், ஈட்டி போன்ற பழங்கால ஆயுதங்களை ஏந்தியுள்ள இக்குழுவினர் 17ஆம் நூற்றாண்டு முதல் செயல்பட்டுவரும் சீக்கியப் பிரிவினர்.

அரசாங்கம் தங்கள் விளைபொருள்களுக்குக் கூடுதல் விலை தரவேண்டும் என்ற கோரிக்கையுடன் தலைநகர் புதுடெல்லிக்குப் பேரணி செல்லும் பலரும் சீக்கியர்களாக இருக்கும் நிலையில், அவர்களைப் பாதுகாக்க முன்வந்துள்ளனர் ‘நிகாங் சீக்கியர்கள்’.

புதுடெல்லிக்கு ஏறத்தாழ 200 கிலோமீட்டர் தொலைவிலேயே விவசாயிகளைக் காவல்துறை தடுத்து நிறுத்திவிட்டது. கண்ணீர்ப் புகையைக் கொண்டும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, இரண்டு நாள்களுக்குப் போராட்டத்தை நிறுத்துவதாக புதன்கிழமை (பிப்ரவரி 21) விவசாயிகள் தெரிவித்தனர்.

போராட்டம் நிறுத்தப்பட்டுள்ள வேளையில், ‘நிகாங் சீக்கியர்கள்’ குதிரையேற்றம், வாள்வீச்சு, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்த்துப் போரிட சீக்கியர்கள் எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்பது குரு கோபிந்த் சிங்கின் கட்டளை,” என்கின்றனர் அவர்கள்.

இவ்வேளையில், ‘டெல்லி சலோ 2.0’ போராட்டத்தில் கலந்துகொண்ட மேலும் ஒரு விவசாயி பிப்ரவரி 23ஆம் தேதி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரணியில் கலந்துகொண்டு உயிரிழந்த விவசாயி தர்ஷன் சிங்.
பேரணியில் கலந்துகொண்டு உயிரிழந்த விவசாயி தர்ஷன் சிங். - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தளம்

தர்ஷன் சிங் எனும் அந்த விவசாயிக்கு வயது 62. அவரையும் சேர்த்து ஐவர் பேரணியின்போது உயிரிழந்துவிட்டனர்.

இதற்கிடையே, இரு நாள்களுக்குமுன் ஹரியானா காவல்துறையினர் ரப்பர் குண்டுகளால் சுட்டு போராட்டக்காரர்களைக் கலைத்தபோது பலியான 21 வயது விவசாயி சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்