மெழுகுவத்தி அணிவகுப்பு நடத்திய விவசாயிகள்; 29ஆம் தேதி முக்கிய முடிவு

மெழுகுவத்தி அணிவகுப்பு நடத்திய விவசாயிகள்; 29ஆம் தேதி முக்கிய முடிவு

2 mins read
b1776f56-bd48-4bf9-a969-70a67cc5d905
பஞ்சாப், ஹரியானா எல்லையில் காத்திருக்கும் விவசாயிகள். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: மத்திய அரசைக் கண்டித்து தலைநகர் டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளின் மாபெரும் பேரணி, போராட்டத்தை பிப்ரவரி 29ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார்.

‘டெல்லி சலோ’ போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிப்ரவரி 29ஆம் தேதி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும், சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்துவது, விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கவேண்டும், மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 13ஆம் தேதி டெல்லி நோக்கி தங்களது பேரணியை விவசாயிகள் தொடங்கினர்.

200 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த 20,000 விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாகச் சென்றனர். 2,500 டிராக்டர்களில் சென்ற விவசாயிகள் டெல்லி-நொய்டா எல்லையில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

அதேபோல் உத்தரப்பிரதேசம், சண்டிகர், பஞ்சாப்பில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். இவர்களைக் காவலர்கள், பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஹரியானா, பஞ்சாப் இடையே ஷம்பு, கானோரி எல்லைகளில் இன்னும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இதுவரை அரசுடன் நடத்தப்பட்ட நான்கு கட்ட பேச்சுவார்த்தையில் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “போராட்டம் குறித்த அடுத்தகட்ட முக்கிய அறிவிப்பு வரும் 29ஆம் தேதி வெளியிடப்படும்.

“இப்போது மெழுகுவர்த்தி அணிவகுப்பு நடத்துகிறோம். இன்னும் இரு நாள்களில் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தப்படும்,” என்றார்.

கடந்த புதன்கிழமை நடந்த போராட்டத்தில் 21 வயது விவசாயி சுப் கரண் சிங் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து சனிக்கிழமை (24ஆம் தேதி) அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெழுகுவத்தி ஏந்தி பேரணி நடத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்