இந்தியாவில் திருமணச் சேவை வழங்கும் செயலிகளை அகற்றிய கூகல்

இந்தியாவில் திருமணச் சேவை வழங்கும் செயலிகளை அகற்றிய கூகல்

1 mins read
1bf8c976-ae3f-4154-93ac-61db19fce7c8
செயலிகளை அகற்றும் கூகலின் நடவடிக்கை இந்தியாவில் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்குச் சினமூட்டும் என்று கருதப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள 10 நிறுவனங்களின் செயலிகளை மார்ச் 1ஆம் தேதி முதல் அகற்றத் தொடங்கியுள்ளது கூகல் நிறுவனம்.

‘பாரத் மேட்ரிமனி’ போன்ற புகழ்பெற்ற செயலிகளும் இவற்றில் அடங்கும்.

சேவைக் கட்டணம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து கூகல் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிறுவனங்களின் செயலி வாயிலாக வாடிக்கையாளர்கள் செலுத்தும் கட்டணங்களுக்கு, 11 முதல் 26 விழுக்காடு வரை தனக்குக் கட்டணம் செலுத்தும்படி கூகல் வலியுறுத்துகிறது.

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சில இந்திய நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

முன்னதாக, 15 முதல் 30 விழுக்காடு வரை கட்டணம் விதித்தது கூகல். ஆனால் போட்டித்தன்மைக் கண்காணிப்பு ஆணையங்கள் அதற்குத் தடை விதித்தன.

பின்னர் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கட்டணம் விதிக்கவும் கட்டணம் செலுத்தாவிட்டால் அந்தச் செயலிகளை அகற்றவும் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட இரண்டு நீதிமன்றங்களின் அனுமதியைப் பெற்றது கூகல். புதிதாகத் தொடங்கிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாரத் மேட்ரிமனி, கிறிஸ்டியன் மேட்ரிமனி, முஸ்லிம் மேட்ரிமனி, ஜோடி ஆகிய தனது செயலிகள் மார்ச் 1ஆம் தேதி அகற்றப்பட்டதாக ‘மேட்ரிமனி.காம்’ நிறுவனம் தெரிவித்தது.

“ஒவ்வொன்றாக எங்கள் செயலிகள் அகற்றப்பட்டுவிட்டன. இது இந்திய இணையத்தின் இருண்ட நாள்,” என்று அது கூறியது.

‘பிளே ஸ்டோர்’ விதிமீறல்கள் குறித்து ‘மேட்ரிமனி.காம்’, ஜீவன்சாத்தி எனும் செயலியை இயக்கும் ‘இன்ஃபோ எட்ஜ்’ ஆகியவற்றுக்கு ஏற்கெனவே அறிக்கை அனுப்பப்பட்டதாக கூகல் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்