தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்: நிலைகுத்திய போக்குவரத்து

2 mins read
d84035c3-41be-4cd2-a142-bf100eb51547
விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி ராம்லீலா மைதானத்தில் மீண்டும் விவசாயிகளின் போராட்டம் தொடங்கியதை அடுத்து போக்குவரத்துகள் நிலைகுத்தி நின்றன. இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

விவசாய உற்பத்திப் பொருள்கள் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் புதன்கிழமை மீண்டும் தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம், மின்சார சட்டத் திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் கூறியதையொட்டி காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் இருந்து இப்போராட்டத்தில் 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என எச்சரித்துள்ள காவல்துறை, நகர வாசிகள் தங்களது பயணத்தை அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.

அத்துடன், விவசாயிகள் அமைதிப் போராட்டம் எந்த நிலையிலும் வன்முறையாக மாறாமல் இருக்க காவல்துறை விழிப்பு நிலையில் இருந்து வருகிறது.

ஏற்கெனவே டெல்லி நோக்கி போராட்டம் நடத்திய விவசாயிகளைக் காவல்துறையினர் எல்லையில் நுழைய அனுமதிக்கவில்லை. அவர்களைக் கட்டுப்படுத்த கான்கிரீட் தடுப்புகள், முள் வளையங்களை அமைத்து தடுத்தனர்.

எனினும், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் சாலையிலேயே உணவு சமைப்பது, கூடாரங்கள் அமைத்து உறங்குவது என போராட்டத்தைத் தொடர்ந்து வந்தனர்.

தடுப்புகளை மீறி டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் கட்டுப்படுத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் சுட்டதில் சிலர் உயிரிழந்துள்ளனர்.

விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி எல்லையில் பதற்றம் நீடித்ததை அடுத்து, விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய தொடர் போச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்து.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்